வரத்து அதிகரிப்பால் வாழை இலை விலை சரிவு

சென்னை: கோயம்பேட்டில், வரத்து அதிகரிப்பு காரணமாக, வாழை இலை விலை குறைந்துள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் ஆண்டிப்பட்டி மதுரை, வத்தலக்குண்டு, வேலூர், தஞ்சாவூர், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுகள் லாரிகள் மூலம் வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து 25 நாட்களாக ஒரு கட்டு வாழை இலை ரூ.2,500க்கும், சிறிய கட்டு வாழை இலை ரூ.1,500க்கும், ஒரு தலை வாழை இலை ரூ.10க்கும் விற்கப்பட்டு வந்தது. இதனால், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் நேற்று காலை ஒரு கட்டு பெரிய வாழை இலை ரூ.1,200க்கும், சிறிய கட்டுவாழை இலை ரூ.500க்கும், ஒரு தலைவாழை இலை ரூ.5க்கும் விற்கப்பட்டது. இதனால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வாழை இலை கட்டுகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து, வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து 25 நாட்களாக வாழை இலை விலை சற்று கூட குறையாமல் அதே விலையில் நீடித்து வந்தது. இதனால் வேதனையாக இருந்தது. திடீர் என்று நேற்று வாழை இலை விலை சரிந்தது. இதனால், நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: