மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை

பெரம்பூர்: பெரம்பூரில் மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் ரமணா நகர் சுப்பிரமணிய பாரதி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (45). இவரது மனைவி பானுமதி (39). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வினோத்குமார் கார் டிரைவர். கடந்த 2 மாதமாக பானுமதி மனநோயால் அவதிப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் பானுமதியின் உறவினர் மணிகண்டன் அவரை பார்க்க வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டாமல் கதவு திறந்து கிடந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள ஹாலில் இருந்த மின்விசிறியில், பானுமதி தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பானுமதியை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் பானுமதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாகவே பானுமதி மனநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: