ஒரகடம் அருகே சொத்து தகராறில் பயங்கரம் லாரி ஏற்றி தந்தை படுகொலை: சவால் விட்டு தீர்த்துக்கட்டிய மகன் கைது

சென்னை: ஒரகடம் அருகே சொத்து தகராறில், தந்தையை மகனே லாரி ஏற்றி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, போலீசார் மகனை கைது செய்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கான நிலத்தை ஏற்கனவே எத்திராஜ் பிரித்து கொடுத்துள்ளார். இதில், 3வது மகன் ராமச்சந்திரன் (40) லாரி டிரைவராக உள்ளார்.

இவர், கடந்த சில மாதங்களாக தந்தையிடம் தனக்கு குறைவாக சொத்து பிரித்து கொடுத்ததாக கூறி கடும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக தந்தை எத்திராஜுக்கும், மகன் ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் எத்திராஜ் வீட்டில் இருந்தபோது, அங்கு ராமச்சந்திரன் சென்று, தனக்குரிய நிலத்தை உடனடியாக பிரித்து கொடுக்கும்படி  கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், உன்னை லாரி ஏற்றி கொன்றுவிடுவேன் என ராமச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இருவரையும் வீட்டில் இருந்த உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று காலை தேவரியம்பாக்கத்தில் எத்திராஜ் வயல்வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தேவரியம்பாக்கம்-சங்கராபுரம் சாலையில் நடந்து வந்தபோது, அங்கு தயார்நிலையில் இருந்த ராமச்சந்திரன், தனது தந்தை எத்திராஜ் மீது லாரியை வேகமாக ஓட்டிவந்து மோதிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில், எத்திராஜ் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்ததும் ஒரகடம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு எத்திராஜின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், ஒரகடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் லாரியுடன் தலைமறைவாக சுற்றி திரிந்த ராமச்சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: