×

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியா..! பலி எண்ணிக்கை 2200-ஐ கடந்தது: மீட்பு பணிகள் தீவிரம்..!

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,200-ஐ தாண்டியது. துருக்கியில் அடிக்கடி ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவில் உயிர் சேதமும் பொருள் சேதமும் உண்டாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்று நர்டஹி நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் கிழக்கே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. பலர், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்கள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நில நடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. 912 பேர் உடல் நசுங்கி இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்த தகவல் முழுமையாக வெளியாகவில்ைல. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியாவில் காணப்பட்டது. அங்கும் ஏராளமான கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். 500க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். தகலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கமானது லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டுள்ளது. முதல் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட உடனே கடைசியாக 7.9 ரிக்டரில் அடுத்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. வெளியே ஓட்டம் பிடித்தவர்கள் காருக்குள் தஞ்சமடைந்தனர். அந்த கார்கள் மீதும் கட்டிடங்கள் விழுந்ததில் மக்கள் சிக்கினர். துருக்கியில் சேதங்கள் கடுமையாக உள்ளதால் சர்வதேச உதவியை அந்நாட்டு அரசு கோரி உள்ளது.

உலக நாடுகள் மீட்பு பணிகளில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக அங்கே சுனாமி ஏற்படுமா என தகவல் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சுனாமி குறித்த பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி அரசு சார்பாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் சிறிய அளவில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் துருக்கியில் அடுத்தடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2200ஐ தாண்டியது. துருக்கியில் அதனா, அதியமான், மால்ட்யா, சரமன்மராஸ், காஸியான்டர் உள்பட 10 நகரங்களில் 1,700-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : Turkey, Syria , Earthquake melts Turkey, Syria..! Death toll crosses 2200: Rescue operations intensified..!
× RELATED மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர...