போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்?.. பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

கீவ்: ‘‘போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இம்மாத இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்’’ என்று உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர், முடிவடையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதியில் ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதை எதிர்கொள்ள உக்ரைன் படைகளும் தயார் நிலையில் உள்ளன என்றும் உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ, அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று நேற்று மாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அறிவித்தார். அவருக்கு பதிலாக ராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ், பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று உக்ரைனில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ கூறுகையில், ‘‘போர் துவங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. போர் துவங்கிய நாளான பிப்.24 அன்று, அதன் அடையாளமாக இம்மாத இறுதியில் எங்கள் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக டான்பாஸ் உள்ளிட்ட உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் ரஷ்ய படைகள், தாக்குதல் நடத்தலாம். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு போதுமான அளவு ஆயுதங்களை வழங்க உள்ளன. ஆனால் இம்மாத இறுதிக்குள் அவை எங்களுக்கு வந்து சேராது. இருப்பினும் ரஷ்யாவின் இந்த தாக்குதலை எதிர்கொள்ள எங்களிடம் போதிய ஆயுதங்கள் உள்ளன. தற்போது ஜெர்மனி எங்களுக்கு வழங்கியுள்ள சக்தி வாய்ந்த லியோபர்ட் பீரங்கிகளை பயன்படுத்துவது குறித்து, எங்கள் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் 150 கிமீ வரை பாய்ந்து சென்று, இலக்கைத் தாக்கும் அதிநவீன ஏவுகணைகளும் எங்களிடம் ஏராளமாக உள்ளன.

அதனால் ரஷ்யாவின் இந்த தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போதைய போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கிழக்கில் பாக்முட், வுஹ்லேடர் மற்றும் லைமன் ஆகிய இடங்களில் ரஷ்ய படைகளை எதிர்த்து, எங்கள் வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். பாக்முட் பகுதியில் இரண்டு முக்கிய சாலைகளை தீ வைத்து. முற்றிலும் துண்டித்து விடும் நடவடிக்கைகளை ரஷ்யப் படைகள் எடுத்து வருவதாக ராணுவ புலனாய்வு பிரிவு மூலம் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களுடன், வீரர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

கொள்முதலில் ஊழல்?

போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் உக்ரைனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோ மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் மேற்கத்திய நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மேற்கத்திய நாடுகளில் இருந்து தேவையான ஆயுதங்களை பெறுவதில் ஒலெக்சில் ரெஸ்னிகோவின் முயற்சி, பாராட்டத்தக்க அளவில் இருந்தது. ஆனால் உள்நாட்டில் ராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களை, ராணுவ தணிக்கைக் குழுவினர் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்தே ஒலெக்சில் ரெஸ்னிகோ, பாதுகாப்புத் துறையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். எனினும் அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும், தொழில் துறையின் அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: