பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருகூர் செஞ்சுடையாம்பாளையம் பகுதியில், மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் உள்ள கன்றுக்குட்டி, நாய்களை இழுத்துச் சென்ற நிலையில், அதனை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வனத்துறையினர் அங்கு முகாமிட்டு, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். வனவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தபோது, அது சிறுத்தையின் கால் தடத்தை ஒத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி மற்றும் நாய்களை கடித்து இழுத்துச் சென்றது சிறுத்தை என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தினார். இதையடுத்து, நேற்று காலை பல்வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கூண்டுகளை, சிறுத்தை வந்து சென்ற பகுதியில் வனத்துறையினர் வைத்தனர். சில இடங்களில் கேமராவும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளை, தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேப்பர் அட்டை மில் உள்ளது. இதன் அருகே நேற்றிரவு நாய்கள் குரைத்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மில்லில் இருந்த வடமாநில வாலிபர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவ்வழியாக சிறுத்தை போன்று உருவம் கொண்ட நிழல் தெரிந்துள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் மில்லுக்குள் சென்றுவிட்டனர். இதேபோல் மில்லுக்கு அருகேயுள்ள உள்ள வீட்டின் மாடு ஒன்று திடீரென கயிற்றை அறுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்றிரவு சிறுத்தை வந்திருக்கலாம் என வனத்துறையிருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

தொடர்ந்து அந்த பகுதியில் பதிவாகியிருந்த கால் தடத்தை ஆய்வு செய்தபோது அதுசிறுத்தையினுடையது என தெரிந்தது. ஆனால் அது நேற்றிரவு வந்த கால் தடமா அல்லது இதற்கு முன்பு வந்த கால் தடமா என தெரியவில்லை என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: