திருமங்கலத்தின் தீராத பிரச்னையான ரயில்வே கேட்டிற்கு தீர்வு எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தின் தீராத பிரச்னையாக இருந்து வரும் விமான நிலைய ரோடு ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பது எப்போது என நகர மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்டத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாக இருந்து வரும் திருமங்கலம் வளர்ந்து வரும் நகராக மாறி வருகிறது. கடந்த 1979ல் நகராட்சியாக மாறிய திருமங்கலம் தற்போது 27 வார்டுகளுடன் 70 ஆயிரம் மக்கள் தொகையும் கொண்டதாக உள்ளது. இதுதவிர தினசரி ஏராளமானனோர் வந்து செல்கின்றனர்.

மதுரை மாநகரின் நெரிசலை விரும்பாத பலரும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக திருமங்கலத்தை தேர்வு செய்து குடியேறி வருவதால் மக்கள்தொகையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. திருமங்கலத்தின் வளர்ந்து வரும் பகுதியாக சோழவந்தான் ரோடு, விருதுநகர் ரோடு மற்றும் விமானநிலைய ரோடு பகுதிகள் அமைந்துள்ளன. இதில் விமானநிலையம் ரோடு பகுதியில் காமராஜபுரம், கற்பகநகர், சோனைமீனா நகர், ஆறுமுகம் வடபகுதி, மதுராசிட்டிநகர் திருப்பதிபாலாஜி நகர், இந்திராநகர், தர்மர்நகர் உள்ளிட்ட நகர்பகுதிகளும், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம், ஆலங்குளம் என கிராம பகுதிகளும் அமைந்துள்ளன.

மேலும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி, திருமணமண்டபம், தொழிற்சாலை என பல்வேறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. திருமங்கலத்தின் விரிவாக்க பகுதியாக திகழும் விமானநிலையம் ரோட்டில் பெரிய பிரச்னையாக ரயில்வே கேட் அமைந்துள்ளது. திருமங்கலம் தேவர் சிலையில் துவங்கும் விமான நிலைய சாலை மதுரை ரிங்ரோட்டில் சென்று நிறைவடைகிறது. அதாவது திருமங்கலத்திருந்து 12 கி.மீ. தூரம் செல்கிறது. இதில் திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனையொட்டி விமானநிலைய ரோட்டில் அமைந்துள்ள ரயில்வேகேட்தான் இந்த பகுதி மக்களுக்கு தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.

மதுரையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் திருமங்கலத்தை கடந்து செல்கின்றன. இதுதவிர சரக்கு ரயில்கள் அனைத்து சென்று வருகின்றன. இதனால் தினசரி 60 முறைக்கு மேலாக திருமங்கலம் விமானநிலையம் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது நீண்டவரிசையில் வாகன ஓட்டிகள் கேட்டினை கடக்க காத்திருக்க வேண்டியுள்ளது. தங்களது அவசரவேலைக்கு செல்ல வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரயில்வே கேட் பிரச்னையாகவே உள்ளது.

இதனால் திருமங்கலம்-விமானநிலையம் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட்டினை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் மேம்பாலத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது. ஆனால் அதன்பின் பாலபணிகள் எதுவும் துவங்கவில்லை. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அதன்பின்பு கிடப்பில் போடப்படுவதாக திருமங்கலம் நகர மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories: