அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 4 பேர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதி பரபரப்பாக காணப்படும். இப்பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி அதிகாலை 12.50 மணியளவில் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்தின் தொடர்பு மையத்திற்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்தன.

உடனே அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஷெரீப் அலுவலகம் கூறும்போது, பாயிண்ட் ரெயீஸ் டிரைவ் பகுதியில் எண்ணற்ற துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கான பின்னணி என்ன என்று தெரியவில்லை. இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனினும், கடந்த 4ம் தேதி பாட்டர் டிரைவ் பகுதியில் நடந்த கார் கடத்தலுக்கும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பவம் நடந்தபோது, குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் ஏதேனும் புகைப்படங்கள் இருக்கின்றனவா? என்றும் எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகம் கேட்டு கொண்டுள்ளது. அதிகாரிகளுடன், கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையும் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: