சென்னையில் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் காவல்துறை சார்பில் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரை

சென்னை: சென்னையிலுள்ள 99 குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் 105 குடிசை மாற்று வாரிய பகுதிகளில் காவல்துறை சார்பில் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவை மேம்படுத்த அவ்வப்போது குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் கலந்தாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், துணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (05.02.2023) சென்னை பெருநகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என  99 இடங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். இக்கலந்தாய்வில், குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த 1,653 நபர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல, 105 குடிசை மாற்று வாரிய பகுதிகளுக்கும் காவல் குழுவினர் சென்று, அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவல் குழுவினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் நல்வழிபடுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வில் 1,727 நபர்கள் கலந்து கொண்டனர். இக்கலந்தாய்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்காகவும், அவசர உடனடி தேவைக்காகவும் 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் அடங்கிய காவல் உதவி செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, அவசர உதவிக்கு காவல்துறை உதவியை நாடலாம் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் குறித்தும், குற்றச் சம்பவங்கள் குறித்தும் அறிய நேர்ந்தால் உடனே காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முக்கியமாக காவல்துறை உதவி எண்.100, அவசர உதவி எண்.112, பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர் உதவி மையம் எண்.1253, குழந்தைகள் உதவி மையம் எண்.1098 குறித்து எடுத்துரைத்து, இவற்றை குறித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.  மேலும் “முத்துவும் முப்பது  திருடர்களும்” என்ற சைபர் கிரைம் குற்ற விழிப்புணர்வு புத்தகங்கள், குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின் 24 மணி நேர உதவி குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் இது போன்ற கலந்தாய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: