புதுச்சேரியில் மின் துறையை தனியார்மயமாக்க வலுக்கும் எதிர்ப்பு: மின்வாரிய அலுவலகம் முன் இடதுசாரிகள், விசிக போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தும் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த திட்டத்தின்படி நுகர்வோர் தங்களது மின்சார பயன்பாட்டை அறிந்து அதற்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ள இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதும், மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சோனாம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற போராட்டம் நடத்தினர். மின்துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதிலேயே புதுச்சேரி அரசு குறியாக இருப்பதாக தெரிவித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள்  ப்ரீபெய்டு மின் கட்டணம் முறையை கொண்டுவர நவீன மீட்டர்களை அமைப்பதற்காக ரூ.250 கோடி மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: