ஆவடி பகுதிகளில் அரசு விடுமுறையில் இயங்கிய மதுபான பார்கள்: வீடியோ வைரலால் பரபரப்பு

ஆவடி: ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ராமலிங்க சுவாமிகள் ஜோதி தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எனினும், இங்கு தனியார் மதுபான பார்கள் 24 மணி நேரமும் இயங்கி, கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பல்வேறு டாஸ்மாக் பார்கள் தொடர்பான டெண்டர்கள் கடந்த ஆண்டு, அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக, சென்னை மண்டலத்தில் கடந்த ஆண்டு, செப்டம்பரில் டாஸ்மாக் பார்களின் உரிமம் காலாவதி ஆனது.

எனினும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோதமாக தனியார் டாஸ்மாக் பார்கள் 24 மணி நேரமும் இரவு முதல் மறுநாள் காலை வரை இயங்கி வருகின்றன. அரசு விடுமுறை நாட்களில் முழு நேரமும் இயங்குகின்றன. இந்நிலையில், நேற்று தைப்பூசம் மற்றும் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இதனால் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தன. எனினும், சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், பட்டாபிராம், திருநின்றவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று அரசு விடுமுறை தினத்தில் தனியார் டாஸ்மாக் பார்கள் உரிமம் இன்றி முறைகேடாக நாள் முழுவதும் இயங்கி, கள்ளச் சந்தையில் கனஜோராக மதுபானங்களை விற்பனை செய்தன.

இதேபோல், அண்ணனூர் ரயில்நிலைய பகுதியில் ஒரு தனியார் பாரில் மதுபானங்கள் விற்பனை செய்யும் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சட்டவிரோத தனியார் மதுபான பார்களில், ஒவ்வொரு மதுபானங்களுக்கும் இரு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுபோன்ற அத்துமீறலாக செயல்பட்டு வரும் தனியார் மதுபான பார்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: