வாலாஜாபாத் அகத்தியா பள்ளியில் அறிவியல், கணித கண்காட்சி

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் உள்ள அகத்தியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தில் நேற்று மாணவர்களின் பங்களிப்புடன் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து, அப்பள்ளி மாணவ-மாணவிகளின் படைப்புகளில் உருவான தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்ப கோயில்கள், கீழடி அகழ்வாராய்ச்சி களம் உள்பட அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான படைப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் அவற்றை விளக்கிய மாணவர்களை மேயர் மகாலட்சுமி வியந்து பாராட்டினார். மேலும், இக்கண்காட்சியில் தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கனம், தண்ணீர் மாசு, மண்ணரிப்பு தடுப்பு, கழிவுநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீட்டுக் கழிவு மற்றும் மருத்துவமனை கழிவு மேலாண்மை, மாடித் தோட்டம், இயற்கை விவசாயத்திற்கான அவசியம், காற்று மாசு, சிறு தானிய உணவுகளின் நன்மைகள், நெகிழி ஒழிப்பு, தானியங்கி போக்குவரத்து சிக்னல், கணிதப் புதிர்கள், மழலையர்களுக்கான செயல்வழி கணிதம், பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு புதிய படைப்புகளை செயல் விளக்கத்துடன் மாணவர்கள் செய்து அசத்தியிருந்தனர்.

இது, கண்காட்சியை பார்வையிட வந்த அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. இதில் வாலாஜாபாத் பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், அரிமா சங்கத் தலைவர் வெங்கடேசன், அரிமா சங்க நிர்வாகி சசிக்குமார், அறிவியல் விஞ்ஞானி இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: