ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்

கோவை: ‘அம்மா தாயே, மாசாணி தாயே’ என்ற பக்தி கோஷம் முழங்க ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான கடந்த 3ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை சக்தி கும்பஸ்தாபனம் நடந்தது.

இதை தொடர்ந்து குண்டம் இறங்கும் பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டி கொண்டனர். நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சேத்துமடை ரோட்டில் உள்ள, மாசாணியம்மன் திருமண மண்டப வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட 40 அடி நீளம், 12 அடி அகலமுடைய குண்டத்தில் சுமார் 15 டன் விறகால் பூ (அக்னி) வளர்க்கப்பட்டது. அப்போது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து இன்று காலையில், காப்புக்கட்டிய பக்தர்கள் உப்பாற்றில் நீராடினர். காலை 6.30 மணியளவில் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

அங்கிருந்து தலைமை முறைதாரர் மனோகரன் பேழைப்பெட்டியை தலையில் சுமந்து கொண்டுவர, அருளாளி அருண்குப்புசாமி உள்ளிட்டோர் மாலை அணிந்த பக்தர்கள் உடன் நடைபயணமாக குண்டம் நோக்கி வந்தனர். காலை7.20 மணியளவில் குண்டத்தில், அருளாளி அருண்குப்புசாமி பேழைப்பெட்டியில் இருந்த பூப்பந்தை உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே, மாசாணி தாயே’ என்ற பக்தி கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பய பக்தியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் குண்டத்தில் மலர் தூவியும், வணங்கியும் சென்றனர். ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டத்திருவிழாவை காண கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவை உக்கடம், பொள்ளாச்சி, உடுமலை, மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டிருந்தது.

Related Stories: