ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: பாலகிருஷ்ணன் பேட்டி

குடியாத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குடியாத்தத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.  எதிரணியாக உள்ள பாஜ, அதிமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பம் இன்னும் தீரவில்லை. வேட்பாளரை எப்போது தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள் என்பதும், வேட்புமனு தாக்கல் செய்வார்களா? என்பதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பது, தேர்தல் சின்னம் பெறுவதில் குழப்பத்தில் உள்ளனர். மத்திய நிதி நிலை அறிக்கையில் நாட்டில் உள்ள பணக்காரர்கள் மீண்டும் பணக்காரர்களாக ஆகும் திட்டங்கள் இருக்கிறது. ஏழை, எளிய மக்கள், பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், தொழிலாளர்களை பாதுகாக்க எத்திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் முடிந்து விட்டது. தமிழகத்தை புறக்கணிக்கிற ஆட்சியாகதான் மத்திய ஆட்சி உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைக்கபோகும் தோல்வி, வரும் நாடாளுமன்றத்தில் தோற்பதற்கான தொடக்கமாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: