கடவூர், தோகைமலை பகுதியில் கனகாம்பரம் பூ சாகுபடியில் கூடுதல் மகசூல்-அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ள தொழில்நுட்பம் வருமாறு, கரூர் மாவட்டம் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவப்பு, மஞ்சள், டெல்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ரகங்கள் உள்ளது. இதில் பச்சை நிற கனகாம்பரம் பூக்கள் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. நல்ல வடிகால் வசதி உள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் உள்ள நிலங்களில் ஆவணி மாதத்தில் இருந்து தை மாதம் வரை கனகாம்பரம் சாகுபடி செய்யலாம் என்று தெரிவிக்கின்றனர்.

சாகுபடிக்காக தேர்வு செய்து உள்ள நிலத்தை 2 அல்ல 3 முறை நன்றாக உழுது பண்படுத்தி கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 25 டன் அளவிற்கு மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் கலந்துவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு சுமார் 5 கிலோ விதைகள் தேவைப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பாத்திகள் அமைத்து தகுந்த இடைவெளிகள் விட்டு விதைகளை விதைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

கனகாம்பரம் சாகுபடி செய்யும் நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும் என்பதால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போது என்றும் ஆனால் நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுவது அவசியமாகும். செடிகள் நட்டு 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஏக்கருக்கு 75 கிலோ தழைசத்து, 50 கிலோ மணிசத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்ககூடிய உரங்களை இட வேண்டும். இதேபோல் ஒவ்வொரு 6 மாத கால இடைவெளியில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு உரங்களை இட வேண்டும். மேலும் செடிகள் நட்டு 3 மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசு+ல் அதிகரிக்கும் என்கின்றனர். இதேபோல் டெல்லி ரக கனகாம்பரத்திற்கு செடிகள் நட்டு 30 நாட்களுக்கு பிறகு ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 40 கிலோ தழைசத்து உரங்களை இடவேண்டும்.

செடிகள் வளர்ந்தவுடன் களைகள் அதிகமாக தோன்றாது என்பதால் செடிகள் நட்டு முதல் மாதத்தில் ஒரு முறை களை எடுக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது செடிகளின் வேர்பகுதியில் போரேட் அல்லது கார்போப்யு+ரான் என்ற குருனை மருந்தை இடும்போது நூற்புழு நோயை கட்டுப்படுத்தலாம். இதேபோல் வாடல் நோய் தென்பட்டால் 1 லிட்டர் நீரில் 1 கிராம் வீதம் எமிசான் மருந்தினை கரைத்து செடிகளின் வேர்பாகத்தில் ஊற்றிவிட்டால் வாடல் நோயில் இருந்து செடிகளை பாதுகாக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் அசுவினிப் பூச்சிகளை கட்டுபடுத்த டைமித்தோயேட் மருந்தினை 1 லிட்டர் நீருக்கு 1 மில்லி வீதம் கலந்து கனகாம்பரம் செடிகளில் தெளிக்க வேண்டும். செடிகள் நட்டு ஒரு மாதங்கள் கழித்து பூக்கள் பூக்க தொடங்கிவிடும்.

இதில் நன்றாக மலர்ந்த மலர்களை 2 நாட்களுக்கு ஒருமுறை பறித்து வர வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 2 ஆயிரம் கிலோ வரை பூக்கள் கிடைக்கும் என்றும் டெல்லி கனகாம்பரம் ஒரு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 800 கிலோ மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். நல்ல சீசன் காலங்களில் ஒரு கிலோ கனகாம்பரம் பூ ரூ.2 ஆயிரம் வரையும், சீசன் இல்லாத போது ஒரு கிலோ பூ ரூ.150 வரையும் விற்பனை நடைபெறும் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் மேற்படி தெரிவித்து உள்ள தொழில் நுட்பங்களை கடைபிடித்து வந்தால் அதிகமான மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: