திருப்பதியில் புதிதாக ₹23 கோடியில் கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

*தலைமை செயல் அதிகாரி பங்கேற்பு

திருமலை : திருப்பதியில் புதிதாக ₹23 கோடியில் கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தலைமை செயல் அதிகாரி தர்மா தலைமையில் நேற்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தினமும் உண்டியலில் ₹3 முதல் ₹4 கோடி காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

 அவ்வாறு ஆண்டுக்கு ₹1,300 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை  கோயிலுக்கு பின்புறம் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் எண்ணப்பட்டு வந்தது.

ஆனால், இந்த இடத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததாலும், இடவசதி இல்லாததாலும் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பல ஆண்டுகளாக கடும் சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். இதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடம் எதிரே ₹23 கோடி மதிப்பில் புதிதாக பரக்காமணி கட்டிடம் கட்டப்பட்டது.

 இந்த கட்டிடம் கடந்த ஆண்டு முதல்வர் ஜெகன்மோகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா, நாணயங்கள் எண்ணும் இயந்திரம், ரூபாய் நோட்டுகள் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை கோயிலில் இருந்து 12 உண்டியல்கள் லாரியில் புதிய பரக்காமணி கட்டிடத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா தலைமையில் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், பசு பிரவேசம் செய்யப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.  இதில், நேற்று ஒரே நேரத்தில் 225 ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், உண்டியல் காணிக்கை  எண்ணும் பணி உடனுக்குடன் விரைவாக எண்ண முடியும். உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகளை பக்தர்கள் காணும் விதமாக எல் வடிவில் கண்ணாடி பேழை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்கள் காணும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பங்கி பிரகாரத்தில் பக்தர்கள் ஓய்வு எடுக்கலாம்

இதுகுறித்து தலைமை செயல் அதிகாரி தர்மா கூறுகையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை  கோயிலுக்கு பின்புறம் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் எண்ணப்பட்டு வந்தது.

இந்த இடத்திலிருந்து தற்போது தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடம் எதிரே புதிதாக கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இன்னும் ஒரு மாதம் வரை சம்பங்கி பிரகாரம் மற்றும் பரக்காமணி கட்டிடம் இரு இடங்களிலும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.

பிறகு மொத்தமாக பரக்காமணி கட்டித்திற்கு மாற்றம் செய்யப்படும். இதையடுத்து, சம்பங்கி பிரகாரம் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்தப்படும். பின்னர், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் இங்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்’ என்றார்.

Related Stories: