மாயார் அரசு பள்ளி பவள விழாவால் 70 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள மாயார் பகுதியில் கடந்த 70 ஆண்டுக்கு முன் மின் வாரியம் சார்பில் அணைகள் மற்றும் மின் நிலையம் கட்டும் பணிகள் நடந்தது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் இங்கு பணியாற்றினர். இவர்களது குழந்தைகள் படிப்பதற்காக இங்கு ஒரு துவக்க பள்ளி அமைக்கப்பட்டது. மேலும், இந்த மின் வாரிய குடியிருப்புக்களை சுற்றி பலரும் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் குழந்தைகள் படிக்க 1947ம் ஆண்டு அரசு தொடக்க பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளி படிப்படியாக வளர்ந்து 1972ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது.

இந்த பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் முதல் மாயார் பகுதியை சார்ந்த ஏழை குழந்தைகள் வரை என ஆயிரக்கணக்கானோர் இது வரை படித்து வருகின்றனர். இங்கு படித்தவர்களில் ஏராளமானோர் மருத்துவம், காவல்துறை, பொறியியல், ராணுவம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று உள்ள நிலையில் பலர் பணியாற்றியும் வருகின்றனர். தற்போது பழங்குடியின மாணவர்கள் உள்பட 67 மாணவர்கள் படித்து வரும் நிலையில் அப்பள்ளி தனது 75ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையடுத்து பள்ளியின் பவள விழா கொண்டாட முன்னாள் மாணவர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

பின்னர் சுமார் 45 நாட்களில் பள்ளி தொடங்கிய காலத்தில் படித்த மாணவர்கள் முதல் சமீபத்தில் படித்து முடித்த மாணவர்கள் வரை ஒன்று திரட்ட முடிவு செய்தனர். அதனையடுத்து வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வலலைத்தளங்கள் மூலம் மூலம் முன்னாள் மாணவர்களை தொடர்பு கொண்டனர். மெசேஜ்கள் பறக்கவே சுமார் 800 பேர் ஒன்று திரண்டனர்.

குறிப்பாக, 70 ஆண்டுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்களும் அதற்கு அடுத்து படிப்படியாக பள்ளி படிப்பை முடித்து சென்ற மாணவ, மாணவிகள் என அனைவரும் பள்ளிக்கு வந்து பவள விழாவில் கலந்து கொண்டு பவள விழா நினைவு தூண், பவள விழா புத்தகம், நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்து 75 மரக்கன்றுகளை நட்டனர்.

 பின்னர் 70 ஆண்டுக்கு முன் தங்களுடன் படித்த மாணவர்களுடன் பேசி மகிழ்ந்ததுடன் வகுப்பறைகளுக்கும் சென்று அமர்ந்து இளமை கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை இந்நாள் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களும், தற்போது பள்ளியில் படித்து வரும் மாணவர்களும் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

 இதனிடையே தொடக்க காலத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகள் மிகவும் மோசமாக இருப்பதால் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி கொடுத்த அரசு பள்ளி ஒன்று பவள விழாவில் காலெடுத்து வைத்து இருப்பதுடன் அங்கு 70 ஆண்டுகளாக பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

 முன்னாள் மாணவர் பெட்ரிக் சாம்சன் கூறும்போது, ‘‘நான் 1948ல் இந்த பள்ளியில் 1ம் வகுப்பு சேர்ந்தேன். அப்போது, இந்த பள்ளியில் இரு அறைகள் மட்டுமே இருந்தது. அப்போது, அமருவதற்கு பென்ச் போன்ற வசதிகள் இருக்காது. சாக்பீஸ் கொண்டு ஒரு கோடு ேபாடுவார்கள். அதில், ஒவ்வொரு வகுப்பை சார்ந்த மாணவர்களும் அமர்ந்துக் கொள்வோம்.

அப்போது, இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. விலங்குகளும் அதிகமாக இருந்தது. இதனால், நாங்கள் வெளியில் சென்று விளையாட பயப்படுவோம். தற்போது மாணவர்கள் விளையாடுவதற்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது பெருமையாக உள்ளது. நான் 70 ஆண்டுகள் கழித்து இங்கு வந்துள்ளேன். இவ்விழாவில் கலந்துக் கொள்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது’’என்றார்.

முன்னாள் மாணவி எலிசபெத், ‘‘இந்த பள்ளியில் 1964ம் ஆண்டு நான் படித்தேன். அப்போது, தியோடர் என்பவர் ஆசிரியராக இருந்தார். அவர், படிப்பு மற்றும் விளையாட்டில் எங்களுக்கு சிறந்த முறையில் வழிநடத்தி சென்றார். பலர் பெரிய பெரிய அரசு வேலைகளுக்கு சென்று ஓய்வூதியம் பெறுகின்றனர்.

அப்போது படிக்கவில்லை என்றால், தண்டனைகள் அதிகமாக இருக்கும். அப்போது, பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சென்று கேட்க மாட்டார்கள். காரணம், தங்களது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்களை கேட்கமாட்டார்கள். நாங்கள் 60 ஆண்டுகள் கழித்து நண்பர்களை சந்திப்போம் என்று நினைக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

Related Stories: