திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தமிழக டெய்லரை மட்டும் வேலைக்கு கேட்டு நூதன விளம்பர பதாகை-சமூக வலைதளத்தில் ‘வைரல்’

திருப்பூர் : திருப்பூரில் சிங்கர் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் மட்டும் தேவை என வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.டாலர்  சிட்டி, குட்டி ஜப்பான் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்பூர் பகுதியில்  பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங்,  காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை  பகுதியில் விவசாயமும், காங்கயம் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள்  நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.

இந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு  மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம்  உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு  பகுதிகளில் பரவலாக வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி இங்குள்ள நிறுவனங்களில்  பணியாற்றி வருகின்றனர்.

தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு  வரும் ரயில்களில்  சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக  வருகின்றார்கள். இடைத்தரகர்கள் மூலம் ரயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி  இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகின்றார்கள். வேறு மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் திருப்பூரில்  வசிக்ககூடிய முகவரியில் ரேஷன் கார்டு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.  

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் திலகர் நகர் பகுதியில்  வடமாநிலத்தவர்கள் மற்றும் தமிழர்கள் சண்டையிட்டு கொள்வதாக ஒரு வீடியோ  வைரலானது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட  முற்பட்டனர். இதனை தொடர்ந்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  வடமாநிலத்தவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக  சிலரை தேடி வருகின்றனர்.

அதற்குள்ளாக மாஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி  ஒன்றில் வடமாநிலத்தவர்கள் பாக்கு போட்டு எச்சில் உமிழ்வதாக கூறி தகராறு  ஏற்பட இருந்தது. இதனை வடக்கு போலீசார் சாமார்த்தியமாக தடுத்தனர். அதேபோல்  பெருமாநல்லூர் பொங்குபாளையம் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதி வடமாநில  வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது சம்பத் என்பவரை அங்குள்ள  வடமாநிலத்தவர்கள் பிடித்து வைத்து கொண்டு பணம் பெற்றுக்கொண்டு மேலும் இரு  சக்கர வாகனத்தையும் பிடுங்கி வைத்துள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில்  வைரலானது.

இப்படி தொடர்ச்சியான சம்பவங்கள் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக நடந்து வருகிறது. எனவே அவர்களை வேலைக்கு சேர்ப்பதில் இருந்து பலர் பின்வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு விளம்பர பதாகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சிங்கர்  டெய்லர் வேலைக்கு ஆட்கள் தேவை எனவும் தமிழர்கள் மட்டும் தேவை எனவும்  குறிப்பிட்டுள்ளது. இதனை பெரும்பாலானோர் தங்கள் வாட்ஸ்அப்களில் ஸ்டேட்டஸ்  ஆக வைத்துள்ளனர். முகநூலிலும் பரவி வருகிறது.இது குறித்து அந்த விளம்பர பதாகையிலிருந்து தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது அவர் தெரிவித்ததாவது:

 என்  பெயர் சுதாகர். நான் பனியன் நிறுவனத்தில் சிங்கர் கான்ட்ராக்ட் எடுத்துள்ளேன். தற்போது திருப்பூர் உள்ள  நிலைக்கு பலர் திருப்பூரில் வீடுகளை காலி செய்துவிட்டு தங்கள் சொந்த  ஊர்களுக்கு சென்றுவிட்டனர். நிறைய வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள். திருப்பூர் வளர்ந்தது தமிழக தொழிலாளர்களை வைத்துதான். அதனால்  மீண்டும் தமிழக தொழிலாளர்கள் திருப்பூர் தொழிலுக்கு திரும்ப வேண்டும்.  திருப்பூர் தமிழர்களை வைத்தே வளர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: தமிழ்  உணர்வுடன் இந்த பதாகையை கட்டியுள்ளார். தொழிலாளர்கள் பற்றாக்குறை 50  சதவீதம் உள்ளது. இதனால் தான் வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு  அமர்த்துகிறோம். தமிழக தொழிலாளர்கள் வாரிசுகள் படித்து வேறு வேலைக்கு  சென்று விடுகிறார்கள். பெண்கள் அதிகம் உள்ள மாவட்டங்களை தேர்ந்தெடுத்து  அங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும். தற்போது வேதாரண்யத்தில் பனியன் உற்பத்தி  தொழிற்சாலை தொடங்கப்பட்டு அங்கு ஆயிரம் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள்.  அதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.70 லட்சம் வரை சம்பளம்  வழங்கப்படுகிறது.  

நிர்வாக பணிக்கு முழுவதுமாக இயந்திரங்கள் வந்துவிட்டது.  அதனால் ஆட்கள் குறைந்து விட்டார்கள். ஆனால் உற்பத்தி பிரிவிற்கு ஒரு  மெசினில் ஒரு ஆள் பணியாற்ற வேண்டும். திருப்பூரில் 100 மெசின் உள்ள  நிறுவனங்களில் 30 மெசின்களில்தான் பணியாற்ற ஆட்கள் இருக்கின்றார்கள்.  அதனால் வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்படுகிறது.   பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் அரசு சலுகை வழங்கினால், அங்கு  பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பளிக்கலாம். இப்படி  செய்வதினால் பின்னலாடை தொழில் வெளி மாநிலங்களுக்கு போவதை தடுக்கலாம். அதே போல் தமிழக தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பளிக்கலாம். இவ்வாறு  கூறினார்.

Related Stories: