தைப்பூசத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்-பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

கடையம் : தைப்பூசத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆணை வடிவ மலை குன்றின் மேல் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் மலைமேல் உள்ள சுனையிலிருந்து புனித நீர் எடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக தீபாராதனை நடந்தது.

பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். இதில் கீழக்கலங்கல் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற பக்தர் பறவை காவடி எடுத்து திருச்செந்தூர் சென்றது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம், தென்காசி, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மலை மேல் உள்ள முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Related Stories: