புத்தக திருவிழாவால் மீண்டும் புத்துயிர் பெறும் நூலகங்கள்-நன்கொடையாக குவியும் புத்தகங்கள்

சிவகங்கை : சிவகங்கை புத்தக திருவிழாவால் மாவட்டத்தில் உள்ள நூலகங்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.கடந்த ஆண்டு முதல் அரசு மற்றும் பாபாசி சார்பில் சிவகங்கையில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில், ஜன.27 முதல் 2வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புத்தகம் வாசித்தல், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தக விற்பனை நடைபெறும் இத்திருவிழா 11வது நாளான இன்றுடன்(பிப்.6) நிறைவடைகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்திலேயே புத்தக விற்பனையில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்து சிவகங்கை மாவட்டம் சாதனை படைத்தது. இந்த ஆண்டும் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினமும் புத்தக திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர். புத்தகங்கள் வாங்கி பள்ளிகள், நூலகங்களுக்கு தானமாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனத்தினர், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் புத்தகங்களை தானமாக வழங்குகின்றனர். இதனால் ஏராளமான தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல் ஊராட்சி அளவில் உள்ள நூலகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று செயல்பட தொடங்கியுள்ளன.ஆசிரியர்கள் கூறுகையில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே நூலகங்கள் இருக்கும். உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் பெரும்பாலும் நூலகங்கள் இருக்காது. ஆனால் புத்தக திருவிழா மூலம் தற்போது ஏராளமான பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி அளவில் அண்ணா நூலகங்கள் உள்ளன.

ஆனால் அங்கு போதிய நூல்கள் இல்லாத நிலையில் தற்போது புத்தக திருவிழா மூலம் ஏராளமான நூல்கள் நூலகங்களுக்கு கிடைத்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் புத்தக திருவிழா மூலம் நூலகங்கள் புத்துயிர் பெற்றுள்ளன என்றனர்.

Related Stories: