கொள்ளிடம் பாலத்தில் இரும்பு பிளேட்டுகள் சேதம்-விரைவில் சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பகுதியில் அடிக்கடி உடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்த பாலத்தில் 14 இணைப்பு பகுதிகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்த பகுதியை ஜல்லி மற்றும் கான்கிரீட் கொண்டு அடைத்து சரி செய்தனர். அதனையடுத்து அடுத்துள்ள பாலத்தின் நடுப்பகுதியில் மீண்டும் காண்கிரீட் உடைந்துள்ளது. பாலத்திலிருந்து உடைந்த பகுதி வழியே பார்க்கும்போது ஆற்றில் தண்ணீர் செல்வது தெரிகிறது. இப்பாலத்தின் உடைப்பு மேலும் உடைந்து அகலமானால் பாலத்தின் நடுவில் வரும் வாகனங்கள் திடீரென ஆற்றுக்குள் விழும் அபாய நிலை ஏற்படலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி பாலத்தை சரி செய்யவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து விழுப்புரம், கடலூர்,பாண்டிச்சேரி,சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக குமரி வரை செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1950ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இப்பாலத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை தொடர்ந்து வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றன. அனைத்து பேருந்துகளும் இந்த பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த கொள்ளிடம் பாலம் இதுவரை வலிமை குன்றாமல் இருந்தாலும் உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் தான் இந்த பாலம் அடிக்கடி சேதம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாலத்தின் இரு புறங்களிலும் ஓரத்தில் மண் தேங்கியுள்ளது. மழை பெய்யும் போது பாலத்தின் ஓரத்தில் தண்ணீர் வெளியேறி செல்வதற்கு உரிய குழாய்களை மண் அடைத்துக் கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியாமல் பாலத்தில் தேங்கிய கிடப்பதால் பாலம் அடிக்கடி சேதம் அடைந்து வருவதாக பொறியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே இனியாவது பாலத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கவும் தற்போது உடைந்துள்ள பகுதியை நன்கு காண்கிரீட் சிமெண்ட் கலவையை கொண்டு மீண்டும் உடையாமல் இருக்கும் அளவுக்கு அதனை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: