காட்டுமன்னார்கோவிலில் திடீர் மழையால் 500 ஏக்கர் நெல், உளுந்து பயிர் நாசம்-விவசாயிகள் வேதனை

சேத்தியாத்தோப்பு :  காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெய்த திடீர் மழையால் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெல், உளுந்து பயிர் நாசமானது. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். காட்டுமன்னார்கோவில் அருகே எடையார், சம்பவராயபுத்தூர், சாவடி, வௌவால்தோப்பு, பிள்ளையார் தாங்கல் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் சுமார் 2000 ஹெக்டேருக்கு மேல் சம்பா பருவத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சில இடங்களில் நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் லேசான காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் எடையார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுமார் 500 ஏக்கருக்கு மேல் இந்த பகுதியில் உளுந்து, சம்பா நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர் மழைநீரில் சாய்ந்திருப்பதாலும் அறுவடைப் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் சில இடங்களில் நெல் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் நனைந்துள்ளதால் நெற்பயிர்களை விவசாயிகள் வீடுகளில் காயவைத்து வருகின்றனர். விவசாயிகள் தங்கள் வயல்களில் தேங்கிய மழைநீரை பாத்திரங்கள் கொண்டு வெளியேற்றி வருகின்றனர். இந்த மழையால் நெற்பயிரில் ஈரம் காய ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.இதனால், முதிர்ந்த நெல் மணிகள் முளைத்து விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யும் போதும் நெல் மணிகள் உதிர்ந்து விடும் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வடிகால் வசதி செய்து தர கோரிக்கை

இதுகுறித்து விவசாயி ஜெயகுமார் கூறுகையில், எடையார், சம்பவராயபுத்தூர், சாவடி, வௌவால்தோப்பு, பிள்ளையார் தாங்கல் பகுதிகளில் சரியான வடிகால் வசதி இல்லை. மேலும் பயனற்று புதர் மண்டி கிடக்கும் வடிகால்களை தூர்வார பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிய மழைக்கு கூட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக வடிகால் வசதி செய்து தர வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: