அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி: அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ். திமுக, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் கடந்த சில நாட்களாக அதானி குழுமம் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற இருஅவைகளும் முடங்கின. இந்நிலையில், அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது.

இதையடுத்து அதானி குழும விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததற்கு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுக்கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில், காங்கிரஸ், திமுக, கேரள காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, அதானி குழும விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: