மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி?.. மின்வாரியம் நடவடிக்கை

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால்  கடுமையான உத்தரவுகளை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. ஆதார் இணைப்பு அதிக அளவில் நடந்திருப்பதாக கணக்கு காட்டுவதற்காக தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளருக்கு தெரியாமலேயே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 97.98% பேர் இணைத்துள்ளனர். ஆனால் இப்பணியை ஆய்வு செய்ததில், உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது.

இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு மிகக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட்டதை  உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும், உயரதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, பணி குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பகிர்மான பிரிவு தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்களுக்கு ஆதாரில் உள்ள குளறுபடிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறு மின்வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories: