பணமதிப்பிழப்பு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் மூத்த வக்கீல் எம்எல். சர்மாவின் மனுவும் ஒன்றாகும்.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட்டது அல்ல. அதே நேரம் அதில் குறைபாடுகளும் இல்லை என்று கடந்த மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் பணமதிப்பிழப்பு தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி மூத்த வக்கீல் எம்எல். சர்மா நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், அரசியல் சாசன அமர்வு அதன் தீர்ப்பில், தான் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த வாதங்களை கருத்தில் கொள்ளவில்லை. பணமதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடும் அநீதி மற்றும் நீதிக்கு புறம்பானது. எனவே, பணமதிப்பிழப்பு தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய   கேட்டு கொள்கிறேன்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: