இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு

கூடலூர்: இடுக்கி மாவட்டம் முழுவதையும் வனமாக மாற்றி, இங்கு வாழும் மக்களை வெளியேற்றாமல் இருக்க, தமிழ்நாட்டை இணைக்க இடுக்கி மாவட்ட மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேரள பூஞ்சார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகருமான பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள ஜனபக்‌ஷம் கட்சித் தலைவரும், கோட்டயம் மாவட்டத்தின் பூஞ்ஞார் தொகுதியில் ஆறு முறை எம்எல்ஏவாக இருந்தவருமான பி.சி.ஜார்ஜ் இரு தினங்களுக்கு முன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இடுக்கி மாவட்டத்தில் 72.44 சதவீதம் காடுகள் உள்ளன. இங்குள்ள 31 கிராமங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் மூலம் இடுக்கி மாவட்டம் முற்றிலும் வனம் சூழ்ந்த பகுதியாக மாறப்போகிறது. கார்பன் கிரெடிட் நிதியை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கையை கேரள அரசு மேற்கொள்கிறது.

இந்தியாவின் நிலப்பரப்பில் 1.2 சதவீதத்தை கொண்ட கேரளா, யானை பெருக்க தொகையில் 20 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த யானைப் பெருக்கம் கேரளாவில் மிகப்பெரிய மனித, மிருக மோதலை உருவாக்குகிறது. இதற்கு விடை காண வேண்டிய அரசு, மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் இருந்து வெளியேற்ற நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கேரளஅரசு இடுக்கி மாவட்டம் முழுவதையும் வனமாக மாற்றாமலிருக்க, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இவரது பேட்டி கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘60 ஆண்டுகளுக்கும் மேலாக இடுக்கி மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்த, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற குரல் தற்போது கோட்டயத்திலும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழும் இடுக்கி மாவட்டம் முழுவதையும் கேரள அரசு வனமாக மாற்றாமலிருக்க, அதை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என இடுக்கி மக்கள் கோரிக்கை வைக்கவேண்டும் என பூஞ்ஞார் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது வேண்டுகோளை கேரள அரசு ஏற்பதோடு, ஒன்றிய அரசு உதவியுடன் இடுக்கி மாவட்டத்தில் தமிழ்ர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்தோடு இணைப்பதற்கு முன் வரவேண்டும்’’ என்றார்.

Related Stories: