முடிசூடா இசை வாணியாக விளங்கியவர்: வாணி ஜெயராமுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: முடிசூடா இசை வாணியாக விளங்கியவர் வாணி ஜெயராம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர், நிருபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:  முடிசூடா இசை வாணியாக விளங்கிக் கொண்டிருக்கிற வாணிஜெயராம் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர் வாணிஜெயராம். மேலும், 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார். அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.  இந்தநிலையில், பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்னரே எதிர்பாரத விதமாக அவர் மறைந்திருக்கிறார். வாணி ஜெயராமின் மறைவு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகிற்கும் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: