பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்

திருவனந்தபுரம்: நாகர்கோவில் ரயிலில் பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்திய வாலிபரை, காசர்கோடு ரயில் நிலையத்தில் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.  கண்ணூர் விமான நிலைய சோதனையில் சிக்காமல் ரயிலில் வந்தபோது பிடிபட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி கோழிக்கோடு  மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் வழியாக துபாய், குவைத், பஹ்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில்  இருந்து பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.  இதை தடுப்பதற்காக சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கடத்தல் குறையவில்லை. பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று  நாகர்கோவில்- மங்களூரு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் தங்கத்தை கடத்துவதாக காசர்கோடு மாவட்ட சுங்க இலாகா சூப்பிரண்டு ராஜீவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் காசர்கோடு ரயில்  நிலையத்தில் தயாராக காத்திருந்தனர். ரயில் வந்ததும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காசர்கோடு செங்கலா பகுதியை சேர்ந்த முகமது பாயிஸ் (33)  என்பவரிடமிருந்து 1.3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவர்  தங்கத்தை மிகவும் நுணுக்கமாக பிரட் மேக்கரில் மறைத்து வைத்திருந்தார்.  துபாயில் இருந்து கண்ணூர் விமான நிலையத்தில் இறங்கிய இவரிடம் வழக்கம்போல  சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அந்த சோதனையில்  தங்கம் இருப்பதை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: