கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது

மதுரை: ஜாமீன் வழக்குகளில் விதிக்கப்படும் டெபாசிட் தொகைகளால் அரசு பள்ளிகள் நவீன வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை நடத்தும் நீதிபதிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுவர். அந்த வகையில், கடந்த டிசம்பர் முதல் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா,  ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரித்து வருகிறார். மணல் திருட்டு, போதைப் பொருட்கள் பறிமுதல் வழக்குகளில் கைதானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு சிறையில் இருந்த நிலையில், சட்டப்படி அவர்கள் ஜாமீன் பெறும் நிலை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பயன் பெற்றிடும் வகையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோருவோர் தரப்பில் குறிப்பிட்ட தொகையை திரும்ப பெறாத வகையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகைக்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென்றும் நிபந்தனை விதித்து வருகிறார். நீதிபதியின் இந்த உத்தரவால் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் தங்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளில் தன்னிறைவு பெற்று வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் தனியார் பள்ளிக்கு நிகரான அடிப்படை வசதிகளை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வசதிகளைப் பெறுவதன் மூலம் கிராமப்புற மாணவவர்கள் தடையின்றி கல்வி கற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஒன்றியம் கைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பல வழக்குகளில் ரூ.2.50 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதை கொண்டு பள்ளிக்கு தேவையான பிரிண்டர், இரும்பு சேர், பீரோ, நாற்காலி, ரேக்குகள், ஸ்பீக்கர், பூட்டு, மின்சாதனப் பொருட்கள், மணி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஏணி, வகுப்பறைக்கான மேஜை, நாற்காலிகள் உள்ளிட்டவை புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதோடு  பல வகையான பொருட்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், வகுப்பறைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாறியுள்ளன.

இதேபோல் தேவகோட்டை ஒன்றியம் இளங்குடி பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டு அந்த பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்படி வாங்கிய பொருட்களின் விபரங்கள் உரிய ரசீதுகளுடன் தலைமை ஆசிரியர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு நீதிமன்றத்தால் நிதியுதவி கிடைப்பது பெரும் வருவேற்பை பெற்றுள்ளது. பணத்தை பெற்று பள்ளிக்கு வசதிகளை செய்து வரும் தலைமை ஆசிரியர்கள், நீதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: