இதுவரை 48 கோடி பேர் இணைத்துள்ளனர் ஆதார் இணைக்காத பான் எண் ஏப்ரல் முதல் செல்லாது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஆதார் இணைக்காத பான் எண் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி ஒன்றிய அரசின் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது: நாட்டில் மொத்தம் 61 பேர் வருமான வரி நிரந்தர கணக்கு எண்(பான்) பெற்றுள்ளனர். பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31ம் தேதி முடிவடைகிறது. இதுவரை 48 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 கோடி பேரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போது, பான் மற்றும் ஆதாரை இணைக்க விரும்புவோர் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த காலக்கெடுவுக்குள் ஆதார் இணைக்கப்படாத பான் எண்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது. இதனால், வணிக மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இது தொடர்பாக பொது மக்களிடையே பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி நபர் வருமான கணக்கை தாக்கல் செய்ய முடியாது. அதிக வரி செலுத்தியிருந்தால் அதை திரும்ப பெறமுடியாது. இது தவிர வங்கிகள் மற்றும் பிற நிதி சேவைகளை பெறுவதில் சிரமம் ஏற்படும்.

Related Stories: