இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் மேலும் ஒரு குழந்தை பலி: மபியில் தொடர்ந்து சம்பவம்

ஷாதோல்: மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில்  20 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. ஷாதோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சூரஜ் கோல். இவரது 3 மாத கைக்குழந்தை  காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளூரில் உள்ள பெண் வைத்தியரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். காய்ச்சலை குணப்படுத்துவதற்கு குழந்தையின் உடலில் 20 முறை சூடான இரும்பு கம்பியால் வைத்தியர் சூடு வைத்துள்ளார். இதில் குழந்தைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஷாதோல் மாவட்டத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான இரும்பு கம்பியால்  சூடு வைக்கும் முறையில் குழந்தைகள் பலியாவது தொடர் கதையாகி  வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டதில் இரண்டரை மாத குழந்தை பலியானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 2 ஆஷா பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளரை மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில்,‘‘ இதுபோன்ற மூடநம்பிக்கைகள் ஷாதோலில் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: