அதிமுக தேர்தல் பணி நிர்வாகிகள் ‘சைலண்ட்’

அதிமுகவில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி அடுத்தடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்தனியாக  வேட்பாளர்களை அறிவித்தது. இவர்கள் இரண்டு  அணியாக இருந்தால் பாஜவை தமிழகத்தில் வளர்க்க முடியாது என நினைத்து ஒரே அணியாக  சேர்த்து வைத்து கூட்டணியில் தொடர பாஜ முயற்சித்து வருகிறது. இதற்கு  இபிஎஸ் அணியினர் ஒத்துழைக்காமல் இருந்த நிலையில் கோர்ட் உத்தரவின்படி  பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு  செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்குழு  உறுப்பினர்களிடம் படிவத்தில் கையெழுத்து பெறும் பணிகளில் தீவிரம் காட்டி  வருகின்றனர்.

இதனால் அதிமுக இரு அணியிலும் தேர்தல் பணி முடங்கி  கிடக்கிறது. இது குறித்து கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்றி வரும்  நிர்வாகிகள் கூறுகையில், வேட்பாளர் தேர்வில் தாமதம், சின்னம் கிடைப்பதில்  சிக்கல், கோர்ட் உத்தரவுப்படி பொதுக்குழு மூலம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி  இறுதி செய்ய முடியாத நிலை என பல்வேறு காரணங்களால் தொடர்ந்து எங்கள்  அணியில் குழப்பம் நிலவி வருகிறது. கோர்ட் உத்தரவுப்படி  பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர் தேர்வில் கையெழுத்திட வேண்டி உள்ளதால்  நிர்வாகிகள் அனைவரும் படிவம் தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இதனால் கடந்த 2 நாட்களாக தேர்தல் பணியில் கவனம் செலுத்த  முடியவில்லை. தேர்தல் பணி நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் வெளியூரை  சேர்ந்தவர்கள் என்பதால் செல்போனில் அவர்களை தொடர்பு கொண்டால் போனை எடுப்பதில்லை. எனவே குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவான முடிவு  வரட்டும் என நாங்களும் தற்காலிகமாக தேர்தல் பணிகளை நிறுத்த வேண்டிய  கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.

Related Stories: