ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.  ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 18ம் தேதி  வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்  தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி  சார்பில் கடந்த 3ம் தேதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்  செய்தார். இதேபோல தேமுதிக, அமமுக, அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் செந்தில்  முருகன், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 46  பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்புனு தாக்கல் நடைபெறவில்லை.

நாளை (7ம் தேதி) மாலை  3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. அதிமுக எடப்பாடி அணியில்  ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அந்த அணியை சேர்ந்த வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யாமல் உள்ளார். நாளை மதியம் 1 மணிக்கு   நிர்வாகிகளுடன் சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  8ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. 9ம் தேதி வேட்பு மனு வாபஸ்  பெறுதல் நடைபெறுகிறது. அன்றைய தினம் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகிற 27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

Related Stories: