எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அணி ஏற்க மறுப்பு: அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்தையும் நிராகரித்தது, இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?..

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எடப்பாடி அணி அறிவித்த வேட்பாளரை ஏற்க மறுத்து, அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்தை ஓபிஎஸ் நிராகரித்துள்ளார். இதனால், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறக்கினர். இதனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை உருவானது.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. இதில், ஓ.பி.எஸ். அணியினரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதையடுத்து, எடப்பாடி அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிமுக பொதுக்குழு முடிவில் தற்போது 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களில் 2,662 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். மீதமுள்ள சுமார் 148 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைமை கழகம் மூலமாக விண்ணப்ப படிவமும், உறுதிமொழி பத்திரமும் அனுப்பப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது அதிமுக உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்சை இணைத்து அந்த படிவங்களில் கையெழுத்து போட்டு அதிமுக தலைமை கழகத்துக்கு நேற்று முன்தினம் முதலே வழங்க தொடங்கினர்.

நேற்றும் நிறைய பேர் விண்ணப்பம் அளித்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்து கையெழுத்து போட்டுள்ளனர். படிவத்தை 5ம் தேதி(நேற்று) இரவு 7 மணிக்குள் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி அணியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழகத்துக்கு படிவத்தை அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற நானும் என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம் என்று மட்டும் அறிக்கை வாயிலாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து எடப்பாடி வேட்பாளரை ஆதரிப்போம் என்ற வகையில் பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் வாங்க வில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, நாம் தான் காலியாக உள்ள பொதுக்குழு உறுப்பினர் இடங்கள் மற்றும் புதிய உறுப்பினர்களையும் நியமித்துள்ளோம். நம்மிடம் உள்ளவர்கள் தான் உண்மையான பொதுக்குழு உறுப்பினர். எடப்பாடி அணி வேட்பாளருக்கு கையெழுத்து போடுபவர்கள் பொதுக்குழு உறுப்பினரே கிடையாது. நாம் நினைத்தால் புதிதாக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவித்து விடலாம் என்று கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே தமிழ் மகன் உசேனின் கோரிக்கையை ஓபிஎஸ் அணி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன், தேர்தல் அதிகாரி முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அளித்துள்ள வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது மட்டுமல்ல, இன்னும் தேர்தல் அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யாத கே.எஸ். தென்னரசு பெயரை மட்டும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று அறிவித்து இருக்கிறார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது, முன்கூட்டியே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்று தெரிகிறது.

இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறவே மீறுவதாகும். வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால், பொதுக் குழு உறுப்பினர்களை முன்மொழியவும், வழிமொழியவும், அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்பு கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க, இதர வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற உரிமையை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தட்டிப் பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானதாகும்’’ என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், எடப்பாடி அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளையுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி அணியினர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுதிட்ட படிவங்களை டெல்லி தேர்தல் ஆணையத்துக்கு  அனுப்பி விட்டு இரட்டை இலை சின்னத்தை பெற்று விடலாம் என்று எடப்பாடி அணியினர் கருதி இருந்தனர். கடைசி நாளான 7ம் தேதி தென்னரசுவை வேட்புமனு தாக்கல் செய்து வைத்து விடலாம் என்று எடப்பாடி நினைத்து இருந்தார். தற்போது ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்ததால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை ஓபிஎஸ் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: