நாதல்படுகை கிராமத்தில் அந்தரத்தில் தொங்கும் அபாய மயான கொட்டகை: புதிதாக கட்ட வலியுறுத்தல்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மயான கொட்டகை இருபது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் இடிந்துள்ள நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சிமெண்ட் காரைகள் முழுவதுமாக உள்பகுதியில் பெயர்ந்து விழுந்து கட்டிடத்தின் தூண்களும் உடைந்து ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளது.

இந்த மயான கொட்டகையில்தான் இன்றளவும் இறந்தவர்களின் உடலை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏரியூட்டி வருகின்றனர். நாதல் படுகை கிராமம் ஒரு திட்டுப்பகுதியான கிராமம் ஆகும். இங்குள்ளவர்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிராமத்தை காலி செய்து விட்டு தற்காலிக முகாம்களில் தங்கி இருந்துவிட்டு பின்னர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்த பிறகு மீண்டும் கிராமத்துக்கு செல்கின்றனர்.

இந்த வருடம் பருவமழையின் போது கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் ஏழு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் ஏழு முறையும் மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கி பின்னர் கிராமத்துக்கு சென்று குடியேறினர். இப்படி இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் இந்த கிராம மக்களுக்கு மயான கொட்டகை இல்லாமல் இருந்து வருவதும் கூடுதல் சிரமத்தை அளித்து வருகிறது. இங்குள்ள மயான கொட்டகையை அகற்றிவிட்டு புதிய கொட்டகை கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மயான கொட்டகை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மயானத்திற்கு இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் போது திடீரென இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே நாதல்படுகை கிராம மக்கள் நலன் கருதி உடனடியாக இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ள மயான கொட்டகையை போர்க்கால அடிப்படையில் அகற்றிவிட்டு புதிய மயான கொட்டகை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: