சோளிங்கர் பெரிய ஏரியில் மதகு தடுப்புகளை உடைத்த சமூக விரோதிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சோளிங்கர்:  சோளிங்கர் பெரிய ஏரியில் உள்ள மதகு தடுப்புகளை சமூக விரோதிகள் சிலர் உடைத்து  சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோளிங்கர் பெரிய ஏரி 468 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த  பெரிய ஏரி  சோளிங்கர் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீராகவும், விவசாய நிலங்களுக்கும் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த கன மழையால் சோளிங்கர் பெரிய ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஏரியில் நிரம்பிய தண்ணீரை சேமிக்கும் வகையில் கடைவாசல் பகுதியில் உள்ள ஒன்பது கண் மதகுகளை கார்த்திகை மாதம் பொதுப்பணித்துறை மூலம் தடுப்பு பலகை அமைத்தனர்.

தடுப்பு அமைத்த சில தினங்களிலேயே சமூக விரோதிகள் 9 கண் மதகுகளில் 8 கண் மதகு தடுப்பு பலகைகளை உடைத்து சேதப்படுத்தி தடுப்பு பலகை அமைப்பதற்கான அடையாளம் இல்லாதவாறு செய்துள்ளனர். இதனால் ஏரியில் நிரம்பியிருந்த தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் ஏரியில் முழு கொள்ளளவு நிரம்பியிருந்த தண்ணீர் தற்போது பாதியாக குறைந்துள்ளது. இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தண்ணீரை சேமிக்க  மதகுகளில் தடுப்பு பலகைகள் அமைக்கவும், தடுப்புகளை உடைத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: