பேரூர் கல்யாணி யானைக்கு ரூ.60 லட்சத்தில் குளியல் தொட்டி: வாக்கிங் செல்ல சிறப்பு ஏற்பாடு

கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மேலைச்சிதம்பரம் என அழைக்கப்படும் திருத்தலம் ஆகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோயிலில் ஏராளமான கோபுரங்கள், மண்டபங்கள் கலை நுட்பத்துடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளன.இதனால், கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் இந்த கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கல்யாணி யானை தான். இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோயிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோயிலுக்கு வரும் தனி கூட்டம் இருக்கிறது. தற்போது கல்யாணிக்கு 32 வயதாகிறது.

திமுக அரசு ஆட்சி அமைத்தது முதல் அறநிலையத்துறை மற்றும் வனத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, பேரூர் கோயில் கல்யாணி யானைக்கு குளிக்கவும், நடை பயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறையின் சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோயில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்து வந்தனர். குறிப்பாக, நொய்யல் ஆற்றங்கரையின் அருகிலேயே கோயிலுக்கு சொந்தமாக இருக்கும் இடத்தில் குளியல் தொட்டி அமைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால், சில காரணங்களினால் அங்கு குளியல் தொட்டி அமைக்கவில்லை. இதனை தொடர்ந்து கோயிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோயில் பின்பகுதியில் கோயிலுக்கு சொந்தமான சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதே போல், அதே பகுதியில் யானை நடை பயிற்சி மேற்கொள்ளவும் நடைப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேரூர் கோயில் யானை கல்யாணிக்கு தற்போது கோயில் வளாகத்தில் தான் காலை, மாலை என இரண்டு வேளையும் குளியல் நடக்கிறது. அப்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் யானை குளிப்பதை பார்க்கின்றனர். இதனால், சுமார் 1.30 மணி நேரம் மட்டுமே யானையால் அங்கு குளிக்க முடிகிறது. மேலும், நடை பயிற்சி செய்ய போதிய இடமில்லை. இதனால், கோயில் பிரகாரம் மற்றும் சுற்றுவட்ட பாதையை மட்டுமே நடை பயிற்சிக்கு யானை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் குளியல் தொட்டி, நடை பயிற்சி பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதனை அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இதன் காரணமாக இனி கல்யாணி யானை தண்ணீர் தொட்டியில் 3 மணி நேரம் வரை குளியல் போடும். 10 கிலோ மீட்டர் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: