தாவரவியல் பூங்காவில் துலிப்ஸ் மலர் நாற்றுகள் உற்பத்தி துவக்கம்

ஊட்டி: கோடை சீசனின் போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் மலர்  கண்காட்சி நடத்தப்படுகிறது. அப்போது, பூங்காவில் 5 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் நடவு  செய்யப்பட்டு, அவை பூத்துக் குலுங்கும். மேலும், 35 ஆயிரம் தொட்டிகளை  கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படும்.

இந்த தொட்டிகளில்  வெளி நாடுகளில் காணப்படும் மலர்களும் நடவு செய்யப்பட்டு அந்த மலர்கள்  பூத்துக் காணப்படும். சில சமயங்களில் வெளி நாடுகளில் இருந்து கொண்டு  வரப்பட்ட மலர்களை கொண்டு மாடங்களில் பல்வேறு மலர் அலங்காரங்கள்  மேற்கொள்ளப்படும்.

இதற்காக,  வெளி நாடுகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்படும்.  இந்நிலையில், இம்முறை ஹாலந்து நாடுகளில் காணப்படும் துலிப்ஸ் மலர்  நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு சோதனை முயற்சியாக தாவரவியல் பூங்கா  நர்சரியில் வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 50 மலர் செடிகள் உற்பத்தி  செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மலர் செடிகளில் மலர்கள்  பூக்கத்துவங்கினால், தொடர்ந்து அதிக மலர் செடிகள் கொண்டு வரவும்  தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. தற்போது பூங்காவில் உள்ள நர்சரியில்  தூ லிப்ஸ் மலர் செடிகள் வளர்க்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

மலர் நாற்றுகளுக்கு பாதுகாப்பு : ஆண்டு  தோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நீர் பனி விழும். நவம்பர்  மாதம் இறுதி வாரம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறை பனி விழும்.  ஆனால், இம்முறை மழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் வரை பனி பொழிவு  காணப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் முதல் உறை பனி காணப்பட்டது. கடந்த  மாதம் இறுதி வாரம் முதல் பனி பொழிவு அதிகரித்துள்ளது. ஒரு சில நாட்கள் நீர்  பனியும் விழுகிறது. பனியின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீரோடைகளை  ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக  துவங்கின. தேயிலை, மலை காய்கறிகள் மற்றும் மலர் செடிகளை பனியில் இருந்து  பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர்  பாய்ச்சி வருகின்றனர்.  

ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா  பூங்காக்களில் உள்ள மலர் நாற்றுக்கள் மற்றும் அலங்கார செடிகள் மீது  கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.  தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல்  மைதானத்திற்கு காலையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்  நாற்றுக்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு  வருகிறது. பனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும்  குளிர் நிலவுகிறது.

Related Stories: