அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு சர்வதேச தரத்தில் கோயம்பேடு மார்க்கெட்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் சர்வதேச தரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,‘‘கோயம்பேடு வணிக வளாகத்தில், நேற்று காய்கறி சந்தையில் உள்ள 1985 கடைகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்.

இங்கு ஒரு நாளில் 2 முறை குப்பை அகற்றப்படும். திருவிழா காலங்களில், அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பை அகற்றப்படும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தம் உள்ள 3,941 கடைகள் சர்வதேச தரத்தில் வெளிநாடுகளில் உள்ள மார்க்கெட் போல் தரம் உயர்த்தப்படும். அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியை பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ காஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி, துணை  ஆணையர் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: