கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கு நிவாரணம்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழைக்கு சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

மேலும், அறுவடை செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் நிலையில் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. மழை நீரில் அழுகிய, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்களை கணக்கெடுக்க உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும். நெல் பயிரிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 வழங்க வேண்டும். மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல்லின் ஈரப் பதத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும், வேளாண் பெருமக்களுடன், கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக நமது மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்ல இயலாத நிலையில், வருமானம் இன்றி மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர். மேலும், உப்பளங்களில் நீர் புகுந்து உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக தேவையான நிவாரணங்களை வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Related Stories: