அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 தமிழ் பேராசிரியர் பணிக்கு 723 பேர் போட்டி

சென்னை: அண்ணா பல்லைக்கழகத்தில், காலியாக உள்ள 23 தமிழ் பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு 723 பேர் நேற்று தேர்வு எழுதினர். அண்ணா பல்கலைக்கழகம் 2022-23ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த வகையில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் முதல் 2 செமஸ்டர்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் என்ற 2 கட்டாய பாடங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த தமிழ் பாடங்களை மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்ஜினியரிங் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் வெளியிட்டு இருந்தது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் 6 இடங்கள், உறுப்புக் கல்லூரிகளில் 17 இடங்கள் என மொத்தம் 23 காலி இடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கல்வித் தகுதியாக பி.ஏ.(தமிழ்), எம்.ஏ.(தமிழ்) மற்றும் ஆராய்ச்சி அல்லது பி.ஏ.(தமிழ்), எம்.ஏ.(தமிழ்) மற்றும் நெட், ஸ்லெட், செட் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்படுபவருக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 இடங்களுக்கு கிட்டதட்ட 1,506 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான கணினி வழித் தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (பிப்.4) நடந்தது. 4 கட்டங்களாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 723 பேர் எழுதினார்கள். தேர்வு எழுதியதும், அதில் பெற்ற மதிப்பெண்கள் அந்தந்த தேர்வர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

Related Stories: