முதலில் ஆன்லைன் தேர்வு அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்

புதுடெல்லி: ராணுவத்தில் பணியாற்றுவதற்கான அக்னிவீர் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, முதலில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் ராணுவம், விமானம், கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகள் பணி புரியும் வகையில் அக்னிபாத் என்ற திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுகின்றனர்.

இதில் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற செயல்முறை முன்பு இருந்தது. இதில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் முதலில் ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும். பின்னர் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, கடைசியாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆன்லைன் தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் நாடு முழுவதுமுள்ள 200 இடங்களில் நடத்தப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. “இந்த செயல்முறை மாற்றம் ராணுவ பணிக்கு வருபவர்களின் அறிவாற்றல் விஷயத்தில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதுடன், ஆள்சேர்ப்பின்போது தேவையற்ற கூட்ட நெரிசலை குறைக்கும். 2023-24ம் ஆண்டில் ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள சுமார் 40,000 பேருக்கும் இந்த புதிய செயல்முறை பொருந்தும்” என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: