கர்நாடகாவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் தும்குருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். கர்நாடகா சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை கர்நாடகா செல்கிறார். அங்கு நாளை காலை மாதவரா அருகில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வார விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகலில் தும்குரு மாவட்டம்  குப்பி தாலுக்கா பிதரஹள்ளி கிராமத்தில்  உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 615 ஏக்கர் பரப்பளவு  கொண்ட இந்த தொழிற்சாலைக்கு கடந்த  2016ம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார். 615 ஏக்கர் பரப்பளவில்  உள்ள இந்த தொழிற்சாலையில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள 1000 ஹெலிகாப்டர்களை அடுத்த 20 ஆண்டுக்குள் ரூ.4 லட்சம் கோடி மதிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களும், அதை தொடர்ந்து 60 மற்றும் 90 ஹெலிகாப்டர்கள் வரை தயாரிக்க எச்ஏஎல் முடிவு செய்துள்ளது.

Related Stories: