அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 7.5 லட்சம் முதியோருக்கு மீண்டும் உதவித்தொகை: திண்ணை பிரசாரத்தில் அமைச்சர் உறுதி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.  இவரை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதிகளில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வீடு வீடாக திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். வீட்டு திண்ணைகளில் வாக்காளர்களுடன் அமர்ந்து சகஜமாக கலந்துரையாடினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றோம்.

இந்த ஆட்சி குறித்தான மதிப்பீடுகளில் மக்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறார்கள். இப்பகுதிகளில் ஏறத்தாழ ரூ.400 கோடிக்கு மேல் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தனர். குறிப்பாக, ஆதரவற்ற முதியோர்களாக இருந்தாலும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது என்ற ஒரு விதியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால், 7.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் அரசின் உதவித்தொகை வழங்க அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.

Related Stories: