காயம் ஏற்படும் என்ற காரணத்திற்காக கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுக்க முடியாது: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: கபடி விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல் துறை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜாகிர் தண்டலம் கண்டிகை கிராமத்தில் வெற்றியின் சிகரம் கபடி குழு சார்பில் எம் ஜீவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜனவரி 28, 29ம் தேதிகளில் கபடி போட்டி நடத்த அனுமதி கோரி நெமிலி காவல் ஆய்வாளரிடம் ஜனவரி 25ல் விண்ணப்பித்தோம். கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் கடந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாததால் சில வீரர்கள் காயம் அடைந்தனர். கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பொது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பரவல் குறித்து அரசின் அறிவிப்பு ஏதும் தற்போது இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்கான ஆதாரங்களும் அல்லை.

காயம் ஏற்படுகிறது போன்ற காரணங்களுக்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது. எனவே, கபடி போட்டிகளை நடத்த அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து மாற்று தேதியில் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மனுதாரர் புதிய மனுவை அளிக்க வேண்டும். அந்த மனு மீது காவல்துறை அதிகாரி உரிய உத்தரவை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: