விதிகளை மீறி செயல்படுவதால்; போதை மறுவாழ்வு மையங்களில் தொடரும் உயிரிழப்புகள்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புற்றீசல் போல முளைக்கும் போதை மறுவாழ்வு மையங்கள், பணம் மட்டுமே குறிக்கோள் என விதிகளை மீறி செயல்படுவதால், உயிரிழப்புகள் அதிகரித்து அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதில் அதிக லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு கும்பல் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. அது எந்த துறையாக இருந்தாலும், அதில் போலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் போலி என்பது தெரியாத அளவிற்கு அசல் போலவே அனைத்தையும் செய்து பொதுமக்களை ஏமாற்றி லாபம் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில், போதை மறுவாழ்வு மையம் என்ற ஒரு மையத்தை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பெரியதாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று பல்வேறு இடங்களில் போதை மறுவாழ்வு மையம் என்ற பெயரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த மையத்தை நடத்தி வருகின்றனர். மாநில மனநல ஆணையத்தில் முறையாக அனுமதி பெற்று இந்த மையத்திற்கான அனுமதியை பெற வேண்டும். இதற்காக தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் மற்றும் கீழ்ப்பாகத்தில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

போதை மறுவாழ்வு மையம் என்பது மருத்துவமனை கிடையாது. போதைக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தும் ஒரு மையம். இந்த மையத்தில் கண்டிப்பாக மருத்துவர், செவிலியர், சமூக சேவகர், மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், வார்டன் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். மையத்திற்கு ஏற்றார்போல் ஆட்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 பேர் ஒரு மையத்தில் உள்ளார்கள் என்றால் அந்த மையத்திற்கு கண்டிப்பாக 2 டாக்டர்கள், 4 செவிலியர்கள், மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், வார்டன் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். இது சட்டப்படி கொடுக்கப்பட்ட விதி. ஆனால், தற்போதுள்ள போதை மறுவாழ்வு மையங்களில் இதுபோன்ற விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்றால் கண்டிப்பாக கிடையாது. 2008-09ம் ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் 7 சென்டர்கள் மட்டுமே இருந்தன.

ஆனால் தற்பொழுது சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, குறுகிய காலத்தில் இந்த போதை மறுவாழ்வு மையங்கள் வளர என்ன காரணம் என்று பார்த்தால் ஆண்களிடம் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் மட்டுமே இதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. இது போன்ற போதை மறுவாழ்வு மையங்களில் கொண்டு வந்து ஆண்களை விட்டு செல்லும் பெண்கள் மூன்று மாதத்தில் தங்களது கணவன் அல்லது தங்களது பிள்ளைகள் குணமாகி வருவார்கள். மீண்டும் அவர்கள் குடிக்க மாட்டார்கள் என்று எண்ணி இங்கு வந்து விட்டு செல்கின்றனர். இதற்காக மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3 மாதங்கள் வரை இவர்கள் தங்கி இங்கே சிகிச்சை பெற வேண்டும். முதலில் உடல் ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக நோயாளிகளின் உடலில் உள்ள ஆல்கஹால் நச்சுவை நீக்க வேண்டும். மூன்றாவதாக ரத்த பரிசோதனை செய்து, அவர்களுக்கு எது போன்ற பாதிப்புகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நான்காவதாக மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை அளித்து அவர்களை சீராக்க வேண்டும். ஐந்தாவதாக அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் இவ்வாறு இதுபோன்ற சிகிச்சைகளை போதை மறுவாழ்வு மையங்கள் தர வேண்டும்.

ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்றால் கண்டிப்பாக அளிக்கப்படவில்லை என்பது கண்கூடாக பார்க்க முடியும். இதற்கு அடிக்கடி போதை மறுவாழ்வு மையங்களில் நடக்கும் மரணங்களும் ஒரு உதாரணம். ஆட்டு மந்தையை அடைத்து வைப்பது போல ஒரு குறுகிய இடத்தில் 50 பேர், 70 பேர் என அடைத்து வைத்து, அவர்களுக்கு தரமில்லாத உணவுகளை போட்டு மூன்று மாதம் இங்கே இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என அடைத்து வைக்கின்றனர்.

இதில், பலரை அடித்து சித்ரவதை செய்வதால், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு சென்று, அதன்பின்பு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறுக்கின்றன. அப்போது, மட்டும் குறிப்பிட்ட அந்த போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்படுகின்றன. அதன்பின்பு சில மாதங்களிலே மீண்டும் அவை செயல்படுகின்றன. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (13), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். போதைக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, சிறுவனின் தாய் அகிலா கடந்த மாதம் 21ம் தேதி சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை சேர்த்துள்ளார். கடந்த 31ம் தேதி நள்ளிரவு சிறுவன் மனோஜ்குமார் மர்மமான முறையில் இறந்தார்.

உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் மகன் சாவின் மர்மம் இருப்பதாக சோழவரம் காவல் நிலையத்தில் மனோஜ்குமாரின் தாய் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள நிர்வாகி தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் விஜயகுமார் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் ஜீவிதன், டில்லிபாபு, யுவராஜ் ஆகிய 4 பேரை கொலை வழக்கில் சோழவரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது நடந்த சம்பவம். இதுபோன்று ஒவ்வொரு முறையும் போதை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்படும் இளைஞர்கள் உயிரிழப்பதும் போதை மறுவாழ்வு மையங்களை நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

போதை மறுவாழ்வு மையங்களை ஆரம்பிக்கும்போது, ஒவ்வொரு மையத்திலிருந்தும் எங்களிடம் ஒரு மருத்துவர், ஒரு மனநல மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் என அவரிடம் கையெழுத்து வாங்கி சென்டர்களை ஆரம்பிக்கின்றனர். ஆனால், அதன்பிறகு மருத்துவர்கள் வாரம் ஒரு முறை வந்து செல்வதும், மனநல மருத்துவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை வந்து செல்வதும் என இதுபோன்ற நடைமுறைகள்  பின்பற்றப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு விஷயம். மேலும், ஐந்து பேருக்கு ஒரு பாத்ரூம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் எந்த ஒரு சென்டரிலும் அது முறையாக பின்பற்றப்படுவது இல்லை. 50 பேர் இருக்கும் இடத்தில் கூட இரண்டு பாத்ரூம்கள் மட்டுமே உள்ளன. இதனால், சிகிச்சைக்கு வரும் போதைக்கு அடிமையான நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் தரமான சாப்பாடு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதனால், ஏற்கனவே மனவிரக்தியில் குடிபோதைக்கு அடிமையான நபர்கள் போதை மறுவாழ்வு மையங்களுக்கு வந்து மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் தப்பித்து செல்கின்றனர் அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற நிலை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநல துறையின் தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் அலெக்ஸாண்டர் ஞானதுரை கூறுகையில், ‘‘போதை மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்கள் முதலில் தங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனை மருத்துவமனையில் மட்டுமே செய்ய வேண்டும் ஏனென்றால் அவ்வாறு நச்சுத்தன்மையை நீக்கும்போது பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திடீரென்று நோயாளிகளுக்கு வலிப்பு வர வாய்ப்புள்ளது. மேலும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

இதனால் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு குறைந்தது 7 நாட்களாவது அங்கு சிகிச்சை பெற்று அவர்களது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிய பின்பு தான் அவர்கள் போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சில போதை மறுவாழ்வு மையங்களில் இந்த சிகிச்சை முறை பின்பற்றப்படுவதில்லை, என கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறு. சில நேரங்களில் இது ஆபத்தை விளைவிக்கும். மேலும் போதை மறுவாழ்வு மையங்களில் ஒவ்வொரு நோயாளிகளின் மனநிலையை அறிந்து மனநல மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். அப்போதுதான் ஒரு நோயாளி எந்த நிலையில் உள்ளார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற மருந்துகளை அளிக்க முடியும். அதனால் சென்டர்களில் மனநல மருத்துவர்கள் இருப்பது அவசியமாகிறது. அரசு மருத்துவமனைகளிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும்,’’ என்றார்.

Related Stories: