தூய்மைப்பணியாளர்களிடம் நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும்: பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர்  கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத  குப்பை மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோகக் குப்பை என வகைப்பிரித்து,  சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கி சேகரிக்கப்படுகிறது.

இதேபோல, சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளையும் தனியாக பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்கிடவும், இவ்வாறு சேகரிக்கப்படும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மண்டலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்படும் மண்டலங்களில் அதற்கென ஒதுக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு  எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு வீட்டிலும் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை  தனியாகப் பிரித்து பாதுகாப்பாக தனியே மக்கும் உறையில்  போட்டு, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை மண்டல வாரியாக பரிசோதனை அடிப்படையில் 18,140 கி.கி   சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலியில் அமைந்துள்ள எரியூட்டு நிலையங்களுக்கு  எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டது.

Related Stories: