கடந்த மாதம் பத்ம பூஷணுக்கு தேர்வான பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம்

சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78. 1945ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வேலூரில் துரைசாமி அய்யங்கார்,பத்மாவதி தம்பதிக்கு கலைவாணி என்ற மகள் பிறந்தார். கடலூர் னிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையை பயின்றார். சென்னைக்கு படிக்க வந்தவர், ராணி மேரி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. ஜெயராம் என்பவரை திருமணம் செய்தார். பிறகு பணியிட மாறுதல் கிடைத்ததால் மும்பையில் வசித்தார். கலைவாணி என்ற தனது பெயரை வாணி என சுருக்கிக் கொண்டார். வாணி ஜெயராமின் இசை திறமைக்கு அவரது கணவர் ஜெயராம் உதவியாக இருந்தார். இதனால் திருமணத்துக்கு பிறகு உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார். வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட ஆரம்பித்தார். பெரும்பாலும் கர்நாடக இசைப் பாடல்களை பாடி வந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரது குரலை கேட்டு திரையுலகினர் மெய்மறந்தனர். 1971ம் ஆண்டில் இந்தியில் வெளியான ‘குட்டி’ படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலை பாடினார். இதுதான் அவரது சினிமா பிரவேசத்துக்கு காரணமாக அமைந்த திரைப்படம். இந்த பாடல் மெகாஹிட்டானது.  இதையடுத்து தமிழ் பாடகி, இந்தியில் பாடியிருக்கிறார் என அறிந்த தமிழ் திரையுலகினர் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தனர்.

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க’, ‘முத்தமிழில் பாடவந்தேன்’ என தமிழில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை பாடினார். 1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆன ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற கவிஞர் வாலியின் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடல் வாணி ஜெயராமை பிரபலம் ஆக்கியது. தமிழ் ரசிகர்களின் விருப்பமான பாடகியாக அவர் மாறிப்போனார்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றவர்.

‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது’, ‘நீயா’ படத்தில் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’, ‘பாலைவனச் சோலை’யில் ‘மேகமே மேகமே’, ‘புனித அந்தோனியார்’ படத்தில் ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, பி. சுசீலாவுடன் இணைந்து ‘பாத பூஜை’ படத்தில் ‘கண்ணாடி அம்மா உன் இதயம்’, ‘அந்தமான் காதலி’யில் ‘நினைவாலே சிலை செய்து’, ‘சினிமாப் பைத்தியம்’ படத்தில் ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’, ‘தங்கப்பதக்க’த்தில் ‘தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, ‘பாலாபிஷேக’த்தில் ‘ஆலமரத்துக் கிளி’ என ஹிட்டுக்கு  மேல் ஹிட் பாடல்களை கொடுத்து அசத்தினார் வாணி ஜெயராம்.

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று பத்மபூஷண் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் நெற்றியில் காயத்துடன் வாணி ஜெயராம் நேற்று பிற்பகல் இறந்து கிடந்தார். இதையடுத்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தியதில் படுக்கை அறையில் கீழே விழுந்து அவர் இறந்தது தெரியவந்தது. அவரது கணவர் முன்பே இறந்துவிட்டார். குழந்தைகள் கிடையாது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார். வாணி ஜெயராம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோடி இரங்கல்; கவர்னர் நேரில் அஞ்சலி: பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு  மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அவரது  இனிமையான குரலால் நினைவுகூறப்படுவார். அவரது மறைவு படைப்புலகிற்கு பெரும்  இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாணி ஜெயராமின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில், எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதி அடைந்திருக்கிறார். அவரது பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கு என் அஞ்சலி’ என்று கூறியுள்ளார்.

Related Stories: