இலவச யூனிட் அதிகரிப்பு விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டணம் குறைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

ஈரோடு: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கடந்த 2021ல் திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் அளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளவானது 750 யூனிட்டில் இருந்து தற்போது 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தொகை தமிழக அரசின் சார்பில் மின்வாரியத்திற்கு செலுத்தப்படும். சமீபத்தில் உயர்த்தப்பட்ட விசைத்தறி கூடங்களுக்கான மின்கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணமான ரூ.1.40 பைசாவில் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு இதற்கான அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: