இந்தியாவை வல்லரசாக மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் முருகன் பேச்சு

சென்னை: இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு, நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லூரியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு வளர்ச்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘2014ம் ஆண்டிற்கு முன்பு நம்முடைய திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களுக்கு போய் சேராமல் இருந்தது.

மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு செல்ல வேண்டும் என்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்ததன் மூலமாக கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடியை  அரசாங்க பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பணத்தை உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக நாம் பயன்படுத்தி வருகிறோம். மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை டிபன்ஸ் காரிடார் இல்லாமல் இருந்தது. பின்னர் 2 டிபன்ஸ் காரிடார் அறிவித்தார். அதில் ஒன்று உத்திரபிரதேசத்திலும், மற்றொன்று கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, ஓசூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து கொடுத்ததால் இன்றைக்கு நம்முடைய ராணுவத்திற்கு தேவையான லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட தேவைகளை நாமே உற்பத்தி செய்கின்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.

முன்பு இஸ்ரோ சார்பில், சாட்டிலைட் அனுப்பி வந்த நிலையில், தற்போது தனியார் மூலமாக சாட்டிலைட் அனுப்பும் அளவிற்கு நாம் முன்னேறி உள்ளோம். அப்துல்கலாம் கனவு இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது. நமது 100வது சுதந்திர தினத்தன்று நமது தமிழ்நாடு வல்லரசு நாடாக மாறுவதற்கு நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சாய்ராம் கல்லூரி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, பாஜ மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: